சதுரகிரி மலை - நள்ளிரவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2000 பக்தர்கள்.!
ஆடி அமாவாசையை ஒட்டி சதுரகிரி மலைக் கோவிலுக்கு சென்ற 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சதுரகிரி மலை
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.
இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசையை ஒட்டி 4 நாட்கள், பௌர்ணமியை ஒட்டி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆடி அமாவாசை
கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 25 ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில் நேற்று இரவு சதுரகிரி மலை கோயிலில் பெய்த கனமழை காரணமாக கோவிலுக்கு செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலி பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது, கோவிலில் இருந்து அடிவாரத்தை நோக்கி கீழே இறங்கிய பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை உதவியுடன் கயிறு கட்டி அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சிக்கிய பக்தர்கள்
ஆற்றில் தண்ணீர் வடிந்த பின்னர் அவர்கள் பாதுக்காப்பாக கீழே இறங்கினர். இந்நிலையில், இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு வருகை தந்த நிலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, ஓடைகளில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து 4 மணிநேர தாமதத்திற்கு பின்பு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.