நிலவில் நீர் இப்படித்தான் உருவானது; சந்திரயானை வைத்து அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!
சந்திரயான் 1 தரவுகளை வைத்து நிலவில் நீர் கூறுகள் எப்படி உருவானது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இஸ்ரோ
நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இருப்பது இந்தியாதான். நிலவில் தண்ணீர் உள்ளதா, பிராண வாயு இருக்கிறதா, உயிர்கள் வசிக்கின்றனவா, வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா, மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் கடந்த 2008ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) சந்திரயான் 1 விண்கலத்தை விண்ணில் ஏவியது. விண்கலமானது முதன்முதலாக நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்து, தொலைவில் இருந்தபடியே நிலவை ஆய்வு செய்து, தரவுகளை பூமிக்கு அனுப்பியது. அதில், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை முதன் முதலில் உலகுக்கு அறிவித்தது இஸ்ரோ.
இதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு, இதுவரை எந்த நாடுமே தடம் பாதிக்காத நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்ய சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது இஸ்ரோ. ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவி கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி சரித்திர சாதனை படைத்தது இஸ்ரோ.
நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. மேலும், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி தொடர்ந்து 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்து பல முக்கிய தகவல்களை உலகிற்கு கொடுத்தது.
நிலவில் நீர்
இந்நிலையில் நிலவில் தண்ணீர் இருப்பது குறித்து இஸ்ரோவின் சந்திரயான் 1 விண்கலம் அளித்த தரவுகளை வைத்து நிலவில் நீர் கூறுகள் எப்படி உருவானது என்பதை அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
நேச்சர் அஸ்ட்ரானமி என்ற அறிவியல் இதழில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். அதில், பூமியின் மேற்பரப்பில் உள்ள அதிக ஆற்றல் உடைய எலக்ட்ரான் உதவியுடன், நிலவில் நீர் கூறுகள் உருவாகியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நிலவில் உள்ள நீரின் செறிவு, வினியோகம் அதன் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்வதும், நிலவில் மனிதர்கள் எதிர்காலத்தில் ஆய்வு மேற்கொள்ள நீர் ஆதாரங்களை வழங்குவதும் முக்கியமான பணி" என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்னர்.