விரைவில் தமிழ்நாட்டின் இந்த ஊரில் இருந்து ராக்கெட் விண்ணில் பாயும் - முன்னாள் ISRO தலைவர் சிவன்!
இந்தியாவின் புதிய ராக்கெட் ஏவுதளம் குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேசியுள்ளார்.
புதிய ஏவுதளம்
விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
அண்மையில் நிலவுக்கான 'சந்திரயான் 3' திட்டத்திலும், சூரியனுக்கான 'ஆதித்யா எல்1' என்ற திட்டத்திலும் வெற்றிபெற்று இஸ்ரோ சாதனை படைத்தது. மேலும் விண்ணில் அடுத்தடுத்த சாதனைகளை படைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், இஸ்ரோவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்துதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு நிலவியல் ரீதியாக சிறந்த இடம் என கண்டறியப்பட்டது. குலசேகரபட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்பட்டு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை தொடங்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னாள் தலைவர் சிவன்
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் ""தமிழ்நாட்டின் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் விரைவில் ஏவப்படும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது.
இன்னும் 400 ஏக்கர் நிலம் வரும் நவம்பர் மதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன்பின் கட்டுமான பணிகள் 12 மாதத்திற்குள் முடிவடையும். கட்டுமான பணிகள் முடிவடைந்ததில் இருந்து, குலசேகரபட்டினத்தில் ஓராண்டுக்குள் ராக்கெட் ஏவப்படும்.
அடுத்ததாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது. தனியார் வருகையால் இஸ்ரோ வளர்ச்சி பாதிக்காது" என்று சிவன் கூறியுள்ளார் .