இந்தியா கூட்டணியில் இணையுமா தெலுங்கு தேசம் ? - சந்திர பாபு நாயுடு பதில்
செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு.
பாஜக கூட்டணி
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா கூட்டணி
மத்தியில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில், பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின.
அதே வேளையில், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க சந்திரபாபு மற்றும் நிதிஷ் குமார் கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டு வர இந்தியா கூட்டணி முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
டெல்லி பயணம்
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்ல உள்ளதாகவும், தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மத்தியில் 3 வது முறையாக பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமையலாம் என்பது உறுதியாகியுள்ளது.