தென் மாவட்டங்களில் மீண்டும் மிரட்ட வரும் கனமழை - 3 நாட்களுக்கு கவனமா இருங்க!
தென்மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் கனமழை
மிக்ஜாம் புயலின் கோரதாண்டவம் காரணமாக கடந்த 3,4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனம்ழை கொட்டித் தீர்த்து வெள்ளம் ஏற்பட்டது.
தொடர்ந்து, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் எற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக 16,17 மற்றும் 18ந் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
எச்சரிக்கை
தற்போது நிலைமை சீராகி மீண்டும் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் நாளை (28-12-23) ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல், நாளை மறுநாள் (29-12-23) கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், வருகிற டிசம்பர் 31ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.