சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் நடைபெறதா? செக் வைக்கும் ஐசிசி
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை மொத்தமாக பாகிஸ்தானிலிருந்து மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
ஹைபிரிட் முறையில் நடக்க உள்ள இந்த தொடரில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மற்றும் முதலாவது அரையிறுதி துபாயில் நடைபெறும் என ஐசிசி அறிவித்திருந்தது.
மைதான சீரமைப்பு பணி
இந்த தொடரானது பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாட மறுத்த நிலையில் போட்டியை ஹைபிரிட் மாடலுக்கு மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், ஐசிசியின் நெருக்கடியால் ஒப்புக்கொண்டது. தற்போது மொத்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரும் பாகிஸ்தானில் இருந்து மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், இன்னும் மைதான சீரமைப்பு பணிகளை பாகிஸ்தான் முடிக்கவில்லை. பாகிஸ்தானில் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மூன்று நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது.
பாகிஸ்தானில் இருந்து மாற்றம்
லாகூர் மற்றும் கராச்சி மைதானங்களில் பார்வையாளர்கள் அமரும் இடங்கள், ட்ரெஸ்ஸிங் ரூம்கள் என பெரிய அளவிலான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் மைதானங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஐசிசி கேட்டுள்ள நிலையில் இன்னும் பகுதியளவிலான பணிகள் கூட நிறைவடையவில்லை.
மேலும், வேலி அமைப்பது, லைட் அமைப்பது, இருக்கைகளுக்கு பெயிண்ட் அமைப்பது என பெரும் பணிகள் உள்ளது. மைதானம் கட்டுமான பணிகள் அவசர கதியில் நடந்தால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்பதால் சோதனை நடத்தியே ஒப்புதல் அளிக்க உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் மைதானங்கள் தயார் செய்யப்படாவிட்டால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து மாற்றி, துபாய், சார்ஜாம் அபுதாபியில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.