இனி பிறந்த நாளுக்கு ஊதியத்துடன் லீவு..அள்ளி தந்த CEO - நெகிழ்ச்சியில் ஊழியர்கள்!
ஊழியர்கள் பிறந்த நாள் விடுப்பு எடுத்து கொள்ள அனுமதித்துள்ளது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
லீவு..
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பல பேருக்கு தேவையான நாட்களில் விடுப்பு கிடைப்பது இல்லை. எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தால் உயர் அதிகாரிகளிடம் கேட்டால், ஏதாவது சொல்லி அலுவலகம் வரவழைப்பது வழக்கமாக உள்ளது.
இதே போன்ற சம்பவம் ஒன்று ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள 'எக்ஸ்பெடிபை' என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆக பணியாற்றும் அபிஜித் சக்கரவர்த்திக்கு என்ற நபருக்கு நடந்துள்ளது.
ஆனால் அவர் தான் பட்ட கஷ்டம் வேறு யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் தனது ஊழியர்களுக்கு அவர்களின் பிறந்த நாளன்றும், குடும்பத்தினரின் பிறந்த நாளுக்கும் விடுப்பு அளித்து இன்ப அதிர்ச்சியை அளித்து உள்ளார்.
இது தொடர்பாக இணையத்தில் அவர் வெளியிட்ட பதிவில், நாங்கள், சமீபத்தில் 'பிறந்தநாள் பிளஸ் ஒன்' விடுமுறை கொள்கையை அமல்படுத்தி உள்ளோம். ஊழியர் ஒருவர், பிறந்த நாள் விடுப்பாக இரண்டு நாட்கள் எடுத்து கொள்ளலாம்.
- தனது பிறந்த நாள்
- தனக்கு நெருக்கமான அல்லது நண்பர்கள் பிறந்த நாள்.
ஊழியர்கள்
இந்த இரண்டு நாட்களும் விடுமுறையாக எடுத்துக்கொள்ளப்படும். இன்று எனது பிறந்தநாள் எனக்கூறி, பலர் விடுப்பு எடுப்பது எனக்கு எப்போதும் வித்தியாசமாக தான் இருந்தது.
முன்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது, மேலாளரிடம் விடுப்பு கேட்டேன். எதற்கு என கேட்டதற்கு இன்று எனது பிறந்த நாள் என பதிலளித்தேன். அப்போது, நான் ஏதோ குற்றம் செய்தது போல் பார்த்தார்.
பிறகு, யாருக்கேனும் பிறந்த நாள் என்றால் பரிசு தான் கொடுக்கலாம். விடுப்பு எல்லாம் தரமுடியாது என்றார். இது எனக்கு விரக்தியை ஏற்பட்டது. தற்போது எங்களது நிறுவனத்தின் விடுப்பு கொள்கை முக்கியமானது.
இது பிறந்த நாளை கொண்டாட ஏதுவாக திட்டமிட்டு கொள்ள ஊழியர்களுக்கு வழிவகுக்கும். இந்த விடுப்பானது, அவர்களது விடுப்பு கணக்கில் கழியாது; விடுமுறையாக கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.