தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதி வழங்காத மத்திய அரசு - வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் ஒரு ரூபாய் கூட மாநில பேரிடர் நிதி வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
குளிர்கால கூட்டத்தொடர்
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எம்.பிக்கள் கேட்கும் கேள்விக்கு துறைசார் அமைச்சர்கள் எழுத்துபூர்வமாக பதிலளித்து வருகின்றனர்.
பேரிடர் நிவாரண நிதி
இதில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட பேரிடர் நிவாரணம் குறித்து கம்யூனிஸ்ட் எம்.பிக்கள் சுப்பராயன், செல்வராஜ் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு , மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்துள்ளார்.
இதில் நடப்பாண்டில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மட்டும் தமிழ்நாட்டுக்கு ரூ.276 கோடி வழங்கபட்டுள்ளதாகவும், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.14,878.40 கோடியை நடப்பாண்டில் மாநில பேரிடர் நிதியாக மத்திய அரசு வழங்கியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.2,984 கோடியும், அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்துக்கு ஒரே தவணையில் ரூ. 1,748 கோடியும் மாநில பேரிடர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
37 பேர் உயிரிழப்பு
நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.8 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.315.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024 - 25ல் தமிழ்நாட்டுக்கு மாநில பேரிடர் நிதியாக ரூ.1,260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் தற்போது வரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.
மேலும் நடப்பாண்டில் மழை வெள்ள பாதிப்பால் தமிழ்நாட்டில் நவம்பர் 27 வரை 37 பேர் உயிரிழந்ததாகவும், 870 வீடுகள் சேதம் அடைந்ததுள்ளதாகவும், 5,521 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாகவும், 9 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்படிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைந்த பாதிப்பை சந்தித்த மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதிக பாதிப்பை சந்தித்த மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.