சாலை விபத்தில் சிக்குவோருக்கு இனி கட்டணமில்லா சிகிச்சை - அரசு திட்டம்
சாலை விபத்தில் சிக்குவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாலை விபத்து
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதற்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமை வகித்தார்.
அதில் பேசிய அமைச்சர், “கடந்த 2024ம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.80 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதில், 30,000 பேர் வரை தலைக்கவசம் அணியாததால் பலியாகியுள்ளனர். மேலும், 18 முதல் 34 வயதுடையோர் 66% பேர் விபத்துகளில் சிக்கியுள்ளனர்.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே முறையான உள்நுழையதல் மற்றும் வெளியேற்றல் பாதைகள் சரியாக இல்லாததன் காரணமாக 10,000 குழந்தைகள் பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க மத்திய அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
அமைச்சர் அறிவிப்பு
அதன்படி சாலைகளில் விபத்து நடந்து 24 மணி நேரத்திற்குள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தால், காயம் அடைந்தவருக்கு 7 நாள் வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதன் மூலம், காயமடைந்தவர் ரூ. 1.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் சிகிச்சை பெறலாம்.
அதேபோல், சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் இடித்து மரணம் ஏற்பட்டால், மரணித்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும். இந்தத் தொகை முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும். சாலை விபத்துகளைக் குறைக்க இனி புதிய பஸ்கள் மற்றும் டிரக்குகளில் மூன்று அதிநவீன தொழில்நுட்பங்கள் கட்டாயமாக்கப்படும்.
அதில், ஓட்டுநர்கள் தூங்கினால் உடனடியாக எச்சரிக்கை வழங்கும். மேலும், ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, ஆதார் அடிப்படையில் புதிய தொழில்நுட்பம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.