'மகாதேவ்' செயலி உள்பட 22 சூதாட்ட செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி!
மகாதேவ் செயலி உள்பட 22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது
சூதாட்ட செயலி மோசடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 (நாளை) மற்றும் வரும் 17ம் தேதிகளில் இருக்கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும்,
பாஜகவைப் பொறுத்தவரையில் கணிசமான இடங்களைப் பெற்றாலும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக மகாதேவ் என்ற சூதாட்ட செயலி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளும் நடத்தியது.
அதிரடி தடை
அதில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5.39 கோடி சமீபத்தில் சிக்கியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பணம் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு தேர்தல் செலவுக்கு வழங்க இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடைசெய்யக் கோரி மத்திய அரசுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து மகாதேவ் செயலி உள்பட 22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.