நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது.
நெல் கொள்முதல்
தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்ததோடு ஈரமான நெல்லை சாலையில் கொட்டி காய வைத்துள்ளனர். இருந்தபோதிலும் மழையால் தார்பாயுக்குள்ளும் தண்ணீர் ஊடுருவி நெல்லின் ஈரப்பதம் அதிகமாகிறது. இதனால் 22 சதவீதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு
அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் கொள்முதல் முகமையான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பபட்டன.
இந்நிலையில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய ஐதரபாத் மற்றும் சென்னையில் உள்ள மத்திய தர கட்டுபாட்டு மையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.அதன்படி இன்று தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள வண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஐதராபாத் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனரும் குழு ஒருங்கிணைப்பாளருமான கான்,
மத்திய குழு
சென்னை உணவு தரக்கட்டுபாட்டு பிரிவு தொழில்நுட்ப அதிகாரி யுனஸ் உள்பட 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்த நெல்லின் ஈரப்பத அளவை சரி பார்த்தனர்.
எந்த சதவீதத்தில் ஈரப்பதம் அளவு உள்ளது ? நாள் ஒன்றுக்கு எத்தனை டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கொள்முதல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் விவசாயிகளிடம் நெல்லின் ஈரப்பதம் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்து குறிப்பு எடுத்து கொண்டனர். விவசாயிகளும் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.