தமிழ்நாடு - தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் சிறப்பையும், வரலாற்றையும் தெரிந்து கொள்வோம்!
தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உள்ளது.
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனைதான்.
தஞ்சாவூர் பெருவுடையார் கோவில், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள் என பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சைவ மதத்தின் சிவ வழிபாடு அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வந்தது.
கடல் கடந்து பல நாடுகளில் ராஜ்ஜியத்தையும், சைவ மதம் மற்றும் வாழ்க்கை முறையை பரப்பியவர்கள் சோழர்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் ராஜா ராஜ சோழனால் கட்டப்பட்டது.
புராண காலத்தில் “தஞ்சன், தாரகன், தண்டகன்” என்ற மூன்று மன்னர்கள் தவம் புரிந்து சிவபெருமானிடம் தங்களை யாரும் வெல்ல முடியாத வரத்தை பெற்றனர். வரத்தைப் பெற்ற பிறகு கர்வத்தால் பலரை துன்புறுத்தி வந்தனர். இவர்களின் செயலைக் கண்ட சிவபெருமான் மிகவும் கோபமடைந்தார். சிவபெருமான், திருமாலையையும், காளி தேவியையும் அனுப்பி இவர்கள் மூன்று பேரையும் வதம் புரிய வைத்தார்.
கெட்டவர்களாக இருந்தாலும் இவர்கள் சிவபெருமானின் மிகுந்த சிவபக்தர்கள் என்பதால் தஞ்சன் பெயரில் “தஞ்சாவூர்”, தாரகன் பெயரில் “தாராசுரம்”, தண்டகன் பெயரில் “தண்டகம்பட்டு” என மூன்று ஊர்களுக்கும் பெயர் உண்டானது.
இதனையடுத்து, சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவ பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். சிவபெருமான் மீது கொண்ட அன்பால் கோவில் ஒன்றை கட்ட ராஜ ராஜ சோழன் ஆசைக் கொண்டார்.
தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டுவதற்கு அண்டை மாநிலத்திலிருந்து கற்களை வரவழைத்தார்.
அண்டை மாநிலத்திலிருந்து கொண்ட வந்த கற்களை செதுக்குவதற்கே 25 ஆண்டு காலங்கள் கழிந்தன.
செதுக்கிய அந்த கற்களை சரியான முறையில் அடுக்குவதற்கு 9 ஆண்டுகள் ஆனது.
மொத்தமாக 34 வருவடங்கள் இக்கோவிலை கட்டுவதற்கு செலவழிக்கப்பட்டது.
34 ஆண்டுகளுக்கு பிறகு தன் ஆசைப்படி இந்த அற்புதமான தஞ்சாவூர் பெருவூடையார் கோவிலை கட்டி முடித்தார் ராஜ ராஜ சோழன்.
இந்த கோவிலில் உள்ள சிவபெருமானின் லிங்கம் செய்வதற்கு மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு வடிவமைக்கப்பட்டது.
இந்த சிவலிங்கத்தின் உயரம் மட்டும் 12 அடி கொண்டது. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியின் சிலை, இந்திய கோவில்களில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகும்.
இந்த கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி போன்ற சைவ சமய விழாக்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராஜா ராஜ சோழன் எந்த ஒரு காரியத்தை செய்தாலும், இந்த கோவிலில் உள்ள வராகி அம்மனை வணங்கி விட்டு தான் துவங்குவாராம்.
இப்போது கூட நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்க விரும்புபவர்கள் இந்த கோவிலில் உள்ள வராகி அம்மனை வழிபட்டு சென்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த கோவிலின் சிறப்பே அதன் கலைநயம் மிக்க கட்டமைப்பு தான்.
விஞ்ஞானத்திற்கே சவால் விடும் வகையில் கோவிலின் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை கோவிலின் கோபுர நிழல் கோவிலின் மீது விழாமல் இருப்பது பழந்தமிழர்களின் விஞ்ஞானபூர்வமான கட்டுமானத்தின் திறனைக் காட்டுகிறது.
இக்கோவில் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பிரம்மமந்திரகல் மட்டும் 80 டன் எடை கொண்டது. இந்த கோவிலின் கட்டுமானம் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக் கூறுகிறது.
இக்கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216. சிவலிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழ் உயிரெழுத்துக்கள் 12 சிவலிங்க பீடம் 18 அடி. தமிழ் மெய் எழுத்துக்கள் 18 சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள்.
மிகச்சிறந்த கட்டிடக்கலையையும், சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் 1987 ஆம் ஆண்டு “ஐ. நா.” சபையின் உலக பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாதுகாப்பு அமைப்பால் “பாரம்பரிய முக்கியத்தும் கொண்ட இடம் மற்றும் நினைவு சின்னம்” என்று அறிவிக்கப்பட்டது.