வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறையில் சிசிடிவி பழுது - வாக்கு எண்ணிக்கைகள் என்னவாகும்?
ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறையில் திடீரென சிசிடிவி பழுதானது பரபரப்பு ஏற்படுத்தியது.
வாக்கு எந்திரங்கள்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளிலும்,இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது.
வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்திய பிறகு அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புகளுடன் கண்காணிக்கப்பட்டு அதனை ஸ்ட்ராங் ரூம் எனப்படும் அறையில் பூட்டி வைத்துவிடுவார்கள்.
சிசிடிவி பழுது
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சித்தோடு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. 220க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ள நிலையில் ஸ்ட்ராங் ரூமுக்கு வெளியே வைக்கப்பட்ட கேமரா பழுதானது.
இந்த மக்களவை தொகுதியின் இயந்திரங்கள் இருந்த மையத்தில் ஒரு சிசிடிவி கேமரா நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை செயல்படவில்லை. இந்த தகவலறிந்து விரைந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், பழுதை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டது.
ஐ.பி. (IP) முகவரியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கேமரா பாதிக்கப்பட்டதாகவும் பழுது ஏற்பட்ட கேமரா உடனே சரி செய்யப்பட்டதாகவும் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் கேமராக்கள் பழுதாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.