எப்படி கேமரா பெயிலியர் ஆகும்; ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் - ஜெயக்குமார் ஆதங்கம்!
ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
சிசிடிவி செயலிழப்பு
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீலகிரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கேமராக்கள் திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும்.
ஜெயக்குமார் கேள்வி
ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால், எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.
சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் போது அந்த பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.
இதுபோன்ற தவறுகளுக்கு தேர்தல் ஆணையம் இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப் போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது'' என்று தெரிவித்துள்ளார்.