நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - CBI அளித்த பரபரப்பு தகவல்!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
நீட்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது.
இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட், குஜராத்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் உறுதிசெய்யப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிபிஐ
போலீசாரின் விசாரணையில் இடைத்தரகர்கள் பரசுராம் ராய், ஆரிப் வோரா, விப்கார் ஆனந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் .அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் ரொக்கம், ரூ.2.3 கோடிக்கான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 6 மாநிலங்களில் நடைபெற்று வந்த வழக்குகள் அனைத்தும் கடந்த 23-ம் தேதி இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டன.
இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.அதில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 58 இடங்களில் சோதனை நடைபெற்று , மொத்தமாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
மேலும் சிலர் மீது சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை தீவிரமாக நடைபெறுவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.