மாணவி மர்ம மரணம் - சூடுபிடிக்கும் சிபிசிஐடி விசாரணை!
கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியின் 2வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
எனினும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து தனியார் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை
பள்ளி வாகனங்கள், மாணவ- மாணவியரின் சான்றிதழ் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 350 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என உள்துறை செயலர் பணிந்திரரெட்டி மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் அறிவித்தனர். அதன்படி, சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தீவிர விசாரணை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, பள்ளியிலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 3வது மாடியில் இருந்து மாணவி எவ்வாறு விழுந்திருப்பார்? என்ன நிகழ்ந்திருக்கும்? என
பெண் போன்ற பொம்மையை மாடியில் இருந்து கீழே பலமுறை வீசியும், மேல் தளத்தில் இருந்து விழுந்திருக்கலாமா எனவும் விசாரணையை பல கோணங்களில் நடத்தி வருகின்றனர்.