நான் என்ன பாவம் பண்ணேன்..சிபிசிஐடி போலீசார் விசாரணை வேண்டாம் - டிஜிபியிடம் புகார் கொடுத்த ஸ்ரீமதி தாய்
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிபிசிஐடி விசாரணை வேண்டாம் என மாணவியின் தாய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீமதி தாய் புகார்
கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த நிலையில் அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.
மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், சிபிசிஐடி போலீசார் உண்மையை வெளிகொண்டு வருவார்கள் என மாணவியின் தாய் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு தனது மகன் மற்றும் உறவினருடன் வந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, சிபிசிஐடி போலீசார் தனது உறவினர்களை சம்மன் இல்லாமல் அழைத்து மணிக்கணக்கில் விசாரிப்பதாகவும், செல்போன்களை பறித்து வைத்துக் கொள்வதாகவும், மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
டிஜிபி ஐயாவை பார்த்து நான் என்ன பாவம் பண்ணினேன்..எதுக்காக எனக்கு நீதி மறுக்கப்படுகிறது. என்று கேட்க அவர் எனக்கு தெரியலை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சிபிசிஐடி போலீசார் வழக்கை தற்கொலை கோணத்தில் கொண்டு செல்வதாகவும், தனது மகள் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.