கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது சாராயம் இல்லை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு கள்ள சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கருணாபுரத்தை சேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சின்னதுரை (வயது 36), ஜோசப்ராஜ் (40), மெத்தனால் விநியோகம் செய்ததாக புதுச்சேரி சேர்ந்த மாதேஷ் (19), சென்னையை சேர்ந்த சிவக்குமார் (39), பன்ஷில்லால் (32), கவுதம்சந்த் (50) மற்றும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேல், கண்ணன், கதிரவன் உள்பட 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சி.பி.சி.ஐ.டி விசாரணை
இந்த வழக்கில் முக்கிய புள்ளிகளாக கருதப்படும் கோவிந்தராஜ், விஜயா, சக்திவேல், கதிரவன், கண்ணன், சின்னதுரை, பன்ஷில்லால், கவுதம் சந்த், மாதேஷ், ஜோசப்ராஜ், சிவக்குமார் ஆகிய 11 பேரை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தயாரிப்பதற்காக 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோர்ட்டில் ஆஜர்
விசாரணையில், சென்னையை சேர்ந்த கவுதம்சந்த், பன்ஷிலால் ஆகியோர் உரிமம் பெற்று வெளிமாநிலத்தில் இருந்து மெத்தனாலை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் இவர்கள், எவ்வித உரிமமும் இல்லாத சென்னை சிவக்குமார் மற்றும் மடுகரை மாதேஷ் ஆகியோருக்கு விற்பனை செய்ததும், அதை கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதி சாராய வியாபாரிகள் வாங்கி விற்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் சாராயத்தில் மெத்தனால் கலந்து விற்கவில்லை. தண்ணீரில் மெத்தனால் கலந்து விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதில் சாராயத்திற்கு பதில் தண்ணீர் கலந்தவர்கள் யார் என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, என்பது குறித்தும் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து, 11 பேரில் ஐந்து பேரை நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற ஆறு பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்களை இன்று மாலை 3:00 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.