காவிரி நீர் திறப்பு.. எதிர்த்து எல்லையில் தீவிரமடைந்த போராட்டம் - தமிழர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டதால் மக்கள் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி நீர் திறப்பு
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தின.
கர்நாடக மாநில விவசாய சங்கத்தினர் பெங்களூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ராம்நகர் ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா நேற்றுகாவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முழு அடைப்பு
இந்நிலையில், சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். பின்னர், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு ஆணையிட்டார்.
மேலும், தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து பெங்களூருவில் வரும் 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு கர்நாடக தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உட்பட 100க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.