தயாநிதி மாறன் மீது பாய்ந்த வன்கொடுமை வழக்கு - என்ன பின்னணி?
தயாநிதி மாறன் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன்
மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன். இவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக பட்டியல் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பாஜக பட்டியல் அணி தலைவர் மு.சரவணன், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ''தமிழக தலைமைச் செயலரை கடந்த 13-தேதியன்று திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் சந்தித்தனர்.
வழக்கு பதிவு
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது தயாநிதி மாறன், ‘தலைமை செயலர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா’ எனக் கேள்வி எழுப்பினார்.தாழ்த்தப்பட்ட மக்களைத் தான் மூன்றாம் தர மக்கள் போல நடத்துவார்கள்.
மற்ற சாதியினரை அப்படி நடத்தமாட்டார்கள் என்பது போல் தயாநிதி மாறனின் பேச்சு அமைந்துள்ளது. அவரது பேச்சு வருங்காலத்தில் ஆதிக்க சமூகத்தினர் இதுபோல பேசுவதற்கு வழி வகை செய்யும்.அவரது பேச்சு, பட்டியல் சமூக மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே தயாநிதி மாறன்,டி.ஆர்.பாலு ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இவ்வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.