கல்குவாரிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் - சீமான் உட்பட 75 பேர் மீது வழக்கு பதிவு!
சங்கரன்கோவிலில் உள்ள கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரை தாக்கியதால் சீமான் மீது வழக்கு பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்குவாரி
சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்திருந்தார்.
அப்பொழுது அங்கு உள்ள மக்கள் வடக்கு புதூர் பகுதியில் உள்ள கல்குவாரி மூலம் பாதிப்பு ஏற்படுவதாக புகாரளித்தனர். அதனால் அந்த கல்குவாரிக்கு சீமான் மற்றும் அவரது கட்சியினர் சென்றனர். அப்பொழுது கல் குவாரியின் கேட் மூடப்பட்டு இருந்தது. பணியில் இருந்தவரிடம் கேட்டை திறக்குமாறு கூறியுள்ளனர்.
வழக்கு
இந்நிலையில், அங்கு பணியில் இருந்த வடக்கு புதூரைச் சேர்ந்த சண்முகசாமி என்பவர், உரிமையாளர் சொல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். அப்பொழுது சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் அத்துமீறி கல் குவாரிக்குள் புகுந்ததாகவும், இதை தடுக்க முயன்ற ஊழியரை சிலர் தாக்கியதாகவும், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இதனால் சீமான் உட்பட 75 பேர் மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் அத்துமீறி நுழைந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது அது தற்போது வைரலாகி வருகிறது.