காவல் அதிகாரியை வீடியோ எடுத்து அவமதிப்பு...! பெண் டிரைவர் ஷர்மிளா எதிராக வழக்குப்பதிவு..!
பிரபலமான கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஷர்மிளா
கோவை மாவட்டத்தில் இளம் வயதில் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா, பெரும் பிரபலமடைந்தார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவரை நேரில் சந்தித்து அவரின் பேருந்தில் பயணித்தது முதலே மீடியா வெளிச்சத்திற்கு வந்தார் ஷர்மிளா.
அதனை தொடர்ந்து நடத்துனருடன் வாக்குவாதம் - தகராறு, வேலை இழப்பு என தொடர்ந்து சில நாட்கள் பரபரப்பாக இருந்த ஷர்மிளா அதனை தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலை சந்தித்து கார் பரிசு பெற்றது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது என சில காலம் பிஸியாக தான் இருந்தார்.
ஆனால், அதன் பிறகு மீடியா கண்களில் இருந்து மறைந்து போன ஷர்மிளா மீது தற்போது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பிப்ரவரி 2-ஆம் தேதி கோவை சத்தி சாலையில், ஷர்மிளா ஓட்டிச் சென்ற காரை, பணியில் இருந்த காட்டூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு துணை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் இயக்கியதாக இருவருக்குமே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட ஷர்மிளா ஆய்வாளர் ராஜேஸ்வரியின் லஞ்சம் கேட்டதாக பதிவிட்டு, இது தொடர்பாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷர்மிளா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் பலரும், ராஜேஸ்வரியை அநாகரிகமான வார்த்தைகளால் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.அதன் படி, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.