தத்தளிக்கும் சென்னை..பாலங்களில் கார்களை நிறுத்தினால் அபராதமா? போலீஸ் விளக்கம்!
பாலங்களில் கார்களை நிறுத்தினால் அபாராதமா என்பதற்கு போலீஸ் விளக்கமளித்துள்ளனர்.
அபராதமா?
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் 5 தினங்களுக்குத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் அனைத்திலும் வெள்ள நீர் புகுந்துககொள்ளும் அபாயம் இருப்பதால் மக்கள் மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்திவைக்க தொடங்கினார்.
கடந்த காலங்களில் மழைநீர் வெள்ளத்தினால் கார்கள் உள்பட பல உடைமைகளை இழந்ததால், இந்த முறை உஷரான வாகன ஓட்டிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்களில் கொண்டுவந்து வாகனத்தை நிறுத்தினர்.
வேளச்சேரி விஜயநகர், பேபி நகர், டான்சி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்களது கார்களை வேளச்சேரி - பள்ளிக்கரணை இடையேயான மேம்பாலத்தின் இருபுறத்திலும் நிறுத்தி வைத்தனர்.
விளக்கம்
இதனால் மேம்பாலத்தின் மீது கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது. இதனால், போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததாகவும் தகவல் வெளியானது.
வேளச்சேரி மட்டும் இன்றி மாதவரம், கோயம்பேடு, திநகர் உள்ளிட்ட பகுதிகளிள் உள்ள மேம்பாலங்களிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேம்பாலங்களில் நிறுத்தப்படும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக,
வதந்தி பரப்பப்படுவதாகவும் அது போல எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போக்குவரத்து காவலர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என கடுமையான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.