கோலாகலமாக நடைபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் - அலைக்கடலென திரண்ட மக்கள்!
ஆழித்தேரோட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர்.
அழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி பங்குனி உத்திர பெருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், உலக புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
நேற்று இரவில் தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, அதிகாலையில் விநாயகர் தேரும், அடுத்ததாக சுப்பிரமணியர் தேரும் இழுக்கப்பட்டது.
தேரோட்டத்தில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தரக்ள் திருவாரூரில் திரண்டனர். ஆரூரா தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் தேரோட்டம் நடைபெற்றது.
திரண்ட மக்கள்
ஆழித்தேரை தொடர்ந்து, அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட இருக்கிறது. விழாகான வந்த மக்களுக்கு திருவாரூர் நகராட்சியின் மூலம் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனங்கள், மருத்துவர்கள்,செவிலியர்கள்,மருந்துகள் அடங்கிய குழு தயாராக தேரை பின் தொடர்ந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டன.
ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் நகரமே திருவிழா கோலமாக மாறியது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நகருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.