வெள்ளத்தால் பைக், கார் பாதிப்பா? இதோ முக்கிய தகவல் - அமைச்சர் அறிவிப்பு!
வெள்ளத்தில் பெரும்பாலான வாகனங்கள் பழுதாகியுள்ளது.
வாகனங்கள் பாதிப்பு
வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வெள்ளம் சென்னையை புரட்டிப்போட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
வெள்ள தடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 561.29 கோடி நிதி வழங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
காப்பீடு
இந்நிலையில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாகவும், உதவி மையங்கள்/ சிறப்பு முகாம்கள் அமைத்தும் எளிதான முறையில் வாகன காப்பீட்டுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிடவும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை 600 இருசக்கர, 1275 நான்கு சக்கர மற்றும் 445 வணிக வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக காப்பீடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.