பேரனுக்காக TVS 50 ஓட்டுனாரு .. தாத்தாவுக்காக Flight ஓட்டுறேன் - வானில் நெகிழ்ச்சி தருணம்!
இளம் விமானி ஒருவர் தனது தாத்தா பயணிக்கும் விமானத்தை தானே இயக்கியதை நினைத்து நெகிழ்ந்துள்ளார்.
பிரதீப் கிருஷ்ணன்
தமிழகத்தை சேர்ந்த பிரதீப் கிருஷ்ணன் என்பவர் இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். இவர் விமானங்களை இயக்கும்போது, பயணிகளுடன் அவ்வப்போது தமிழ் மொழியில் உரையாடுவார்.
இந்நிலையில் சென்னை - கோவை சென்ற பயணிகளுக்கு விமானி பிரதீப் கிருஷ்ணன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த விமானம் புறப்படும் முன் பேசிய அவர் "என்னுடன் எனது குடும்பத்தினர் பயணம் செய்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
என் தாத்தா, பாட்டி, அம்மா ஆகியோர் இந்த விமானத்தில் 29-வது வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். இன்று நான்தான் இந்த விமானத்தின் கேப்டன் என்பது அவர்களுக்கு தெரியாது.
நெகிழ்ச்சி தருணம்
என் தாத்தா இன்று தான் என்னுடன் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்கிறார். பலமுறை அவரது டிவிஎஸ் 50 வண்டியில் அவருடன் உட்கார்ந்து நான் சென்றுள்ளேன். இன்று அவருக்கு நான் விமானம் ஓட்டப் போகிறேன்.
தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு விமானியின் கனவு. அந்த வகையில் இன்று எனக்கு நெகிழ்ச்சியான தருணம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் பிரதீப் கிருஷ்ணனின் தாய் ஆனந்த கண்ணீர் வடித்தார். அவரின் தாத்தா, பெருமையுடன் எழுந்து அனைவருக்கும் வணக்கம் சொன்னார். மேலும், பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கைதட்டி உற்சாகம் செய்தனர்.