கையில் மருதாணி இருந்தால் வாக்களிக்க கூடாதா?பரவும் செய்திக்கு தேர்தல் அதிகாரி விளக்கம்!
கையில் மருதாணி இருந்தால் வாக்களிக்க முடியாது என்று பரவி வரும் செய்திக்கு தேர்தல் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
மருதாணி கை
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் நாளை நடைபெறுகின்ற நிலையில்,தமிழகத்தில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தற்போது மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி கிடையாது என்று இணையத்தளத்தில் தகவல் தீயாய் பரவி வருகிறது.
பொதுவாகவே பெண்கள் பண்டிகைகள், கொண்டாட்டங்களின் போது கையில் மருதாணி வைத்துக்கொள்வது என்பது வழக்கம். இந்நிலையில் அப்படி கையில் மருதாணி இருந்தால் வாக்களிக்க அனுமதி இல்லை என்ற தகவலால் மெகந்தி போட்டிருந்த பெண்களுக்கு மிகுந்த பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்திவிட்டது.
தேர்தல் அதிகாரி விளக்கம்
இதனால் அவர்கள் வாக்களிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல வாக்காளர்களுக்கும் இந்த தகவல் பரவியதால், வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள், ரசாயனங்களை கொண்டு அவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சென்னை தேர்தல் அலுவலரிடம் கேட்கப்பட்டது.அப்போது அவர், இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, குறிப்பிட்ட சில சமூகத்தினர் திருமண நிகழ்வுகளின் போது அதிகளவில் மெகந்தி போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.