ஒவ்வொரு மாநில பெயரையும் பட்ஜெட்டில் குறிப்பிட முடியாது - நிர்மலா சீதாராமன் விளக்கம்
பட்ஜெட்டில் மாநிலங்கள் புறக்கணிப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
பட்ஜெட் 2024
பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2024) தாக்கல் செய்யப்பட்டது. 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆளும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதாக கூறி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய கோஷங்கள் எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளது. மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என குற்றஞ்சாட்டினார்.
நிர்மலா சீதாராமன்
இதன் பின் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
மக்களை தவறாக வழிநடத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. மேற்கு வங்கத்தில், நிதி அளித்தும் மத்திய அரசின் திட்டங்களை அம்மாநில அரசு அமல்படுத்தவில்லை. பிரதமரின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. என பேசினார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.