பிரச்சாரம்'லாம் அப்புறம் தான்!! கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த வேட்பாளர் - குவியும் பாராட்டுக்கள்
வேட்பாளர் ஒருவர் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி பாராட்டுகளை வென்று வருகின்றது.
ஆந்திர தேர்தல்
வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சி கூட்டணியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது.
மொத்தமாக இருக்கும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே நாளில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், சுவாரசிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பிரசவம் பார்த்த வேட்பாளர்
ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள தர்சி சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் கோதிபதி லட்சுமி. மருத்துவரான இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் பிரசவ வலியின் காரணமாக வெங்கட ரமணா என்பவர் அனுமதிக்கப்பட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த அக்கர்ப்பிணியை குண்டூரில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், இத்தகவல் கோதிபதி லட்சுமிக்கு தெரியவந்ததுள்ளது. தகவல் அறிந்த அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், கர்ப்பிணிக்கு அவசர அறுவை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். பரபரப்பான தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், கர்ப்பிணிக்கு குழந்தை பேறு பார்த்த வேட்பாளர் கோதிபதி லட்சுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.