வெறும் 48 மணி நேரத்தில் கேன்சருக்கு தடுப்பூசி - மிரட்டும் AI
48 மணி நேரத்தில் கேன்சருக்கான வேக்சினை தயாரிக்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன்சர் வேக்சின்
கேன்சரில் பல நூறு வகைகள் உள்ளன. இதில் சில கேன்சருக்கு மட்டுமே மருந்து உள்ளது. பல கேன்சருக்கு குணப்படுத்தும் சிகிச்சை இல்லை.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆரக்கிள் தலைவர் லாரி எலிசன், "ஏஐ துறை இப்போது மிக பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. இது மக்களுக்கு சுகாதார பாதுகாப்பை வழங்குவதில் நிச்சயம் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
ஏஐ மூலம் ஒவ்வொரு நபருக்கும் என்ன மாதிரியான கேன்சர் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற மாதிரியான mRNA வேக்சினை உருவாக்கும் சூழல் சீக்கிரமே ஏற்படும். பொதுவாக நமது உடலில் கேன்சரின் சிறு பகுதி ரத்தத்தில் எப்போதும் மிதந்து கொண்டு இருக்கும்.
AI அசத்தல்
இதை மட்டும் ஏஐ மூலம் நம்மால் கண்டறிய முடிந்தால் அவ்வளவு தான். அதன் பிறகு எளிமையாக ஒரு ரத்த பரிசோதனை நடத்தி மரபணு வரிசைமுறையின் உதவியுடன், குறிப்பிட்ட புற்றுநோய்க்கு எதிராக போராட ஒரு தடுப்பூசியை உருவாக்கலாம். இதன் மூலம், ஒவ்வொரு நபருக்கும் என்ன கேன்சர் என்பதை ஆராய்ந்து அவருக்கு ஏற்ப வேக்சினை தயாரிக்க முடியும்.
இதன் மூலம் வெறும் 48 மணி நேரத்தில் ஏஐ பயன்படுத்தி உங்களால் வேக்சினை தயாரிக்க முடியும். அதாவது ஆரம்பகால புற்றுநோயைக் கண்டறிதல், குறிப்பிட்ட கேன்சருக்கான தடுப்பூசியை உருவாக்கி, செலுத்துவது என அனைத்துமே ஏஐ மூலம் 48 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.