வயிற்றில் தானாக சுரக்கும் ஆல்கஹால் - வினோத நோயால் அவதிப்படும் பெண்
கனடாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு வயிற்றில் தானாக மது சுரக்கும் அரிய நோய் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா
கனடா நாட்டின் டொராண்டோ பகுதியில் வசித்து வரும் 50 வயதான பெண் ஒருவர், கடந்த சில ஆண்டுகளாக மது அருந்தியது போல் போதையாக இருப்பது, பேசும்போது மது வாசனை வெளியேறுவது போன்ற பிரச்னைகளை சந்தித்து வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை.
இந்நிலையில் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் தான் காரணம் என தெரிவித்துள்ளனர். அப்போது, அந்தப் பெண் தனக்கு மது அருந்தும் பழக்கமே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
அரிய நோய்
இதையடுத்து, டொராண்டோ ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தில் அந்தப் பெண்ணை பரிசோதித்தனர். அதில், அப்பெண்ணின் ரத்தத்தில் லிட்டருக்கு 62 மில்லிமோல் (Millimole) ஆல்கஹால் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது, ஒரு மணி நேரத்துக்குள் 10 பாட்டில் அளவு மது அருந்தியவரின் உடலில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு அவரின் உடலில் காணப்பட்டது.
இது குறித்து பேசிய பல்கலைகழக தொற்றுநோயியல் நிபுணர் ரஹெல் ஹுடே, "அந்தப் பெண்ணின் ரத்தத்தில் இயற்கையாகவே அளவுக்கு அதிகமான ஆல்கஹால் காணப்படுகிறது. ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் ( auto brewery syndrome) என்னும் அரிய வகை நோயால் இவர் பாதிக்கப் பட்டுள்ளார். இந்த பாதிப்பு உலக அளவில் இதுவரை 300 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய் , குடல் பகுதியில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களை அழித்து, தீங்கு தரும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் செய்யும். அது, குடல் பகுதியில் உள்ள பொருள்களை நொதிக்கச் செய்யும். குடல் அழற்சி, கல்லீரல் அழற்சி, குடல், கல்லீரல், சார்ந்த நோய்கள் உடையவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆன்டிபயாட்டிக் மருந்து
இந்தப் பெண், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி சிறுநீர்ப்பாதை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் இவரது குடல் பகுதியில் இருந்த நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, தீமை தரும் பூஞ்சை பாக்டீரியாக்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
இதனால், அப்பெண் உண்ணும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் குடல் பகுதிக்குச் செல்லும்பொழுது இந்த பூஞ்சை பாக்டீரியாக்களால் நொதித்தலுக்கு உட்படுகிறது. கார்போஹைட்ரேட் நொதிக்கும்போது ஈஸ்ட் வெளியேறுவதுடன் அவை ஆல்கஹால் ஆகவும் மாறுகிறது.
இதனால்தான் அவரது ரத்தத்தில் இயல்புக்கு அதிகமாக ஆல்கஹால் அளவு காணப்படுவதுடன், அவர் பேசும்போது மது வாடையும் வருவதாக தெரிய வந்துள்ளது.
"குடல் பகுதிகளில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்க செய்வது மட்டுமே இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு என்றும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.