ஒரே நாடு ஒரே தேர்தல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 2014 தேர்தல் வாக்குறுதியில் பாஜக வழங்கி இருந்தது. சுதந்திர தின உரையில் கூட பிரதமர் மோடி அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என பேசி இருந்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான 18,000 பக்க அறிக்கையை கடந்த மார்ச் மாதம் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்திருந்தார்.
பரிந்துரை
இந்த அறிக்கையில் முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மக்களவையில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும் போது புதிதாக மக்களவைத் தேர்தலை நடத்தலாம். அதன்பிறகு அமையும் புதிய மக்களவையின் பதவிக் காலம், முந்தைய மக்களவையின் மீதமுள்ள பதவிக் காலத்துக்கு மட்டுமே இருக்கும். இதுபோன்ற தருணங்களில், மாநில சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட்டால், புதிய பேரவையின் பதவிக் காலம் மக்களவையின் பதவிக் காலம் வரை தொடரும்.
மேலும், இதற்கு அரசியலமைப்பில் மாநில அரசுகளின் பதவிக்காலம், மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவது , நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பல்வேறு பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தது. இதில் சில திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் 3 ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 50% மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவை.
அமைச்சரவை ஒப்புதல்
தபோது அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்தான கருத்துக் கேட்பின்போது, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி போன்ற 15 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததும், அதிமுக போன்ற 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.