கந்துவட்டி கொடுமைகளை ஒழிக்க ‘ஆபரேஷன் கந்து வட்டி’ - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
தமிழகத்தில் கந்து வட்டி கொடுமைகளை முற்றிலும் ஒழிக்க டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 2 வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த மாதம் ஆடிட்டர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் வட மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பு
இதனையடுத்து, தமிழத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தற்போது தமிழகத்தில் தமிழ்நாட்டிலுள்ள வெளிமாநிலத்தவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. குல்ஃபி, பானிப்பூரி விற்பவர்கள் உட்பட அத்தனை பேர் விவரங்களும் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொருவரின் ஆவணங்களையும் வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆபரேஷன் கந்து வட்டி
இந்நிலையில், கந்து வட்டி கொடுமை தொடர்பாக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கந்து வட்டி தொடர்பாக காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ நடவடிக்கை மூலம் சட்ட அறிவுரை பெற்று வழக்குகளை பதிய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.