தளபதிக்காக வேலையை விட்டு வருபவனே உண்மையான தொண்டன் - புஸ்ஸி ஆனந்த் சர்ச்சை பேச்சு
தவெக மாநாடு தொடர்பாக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
ஒரு பக்கம் விஜய் சினிமாவில் நடித்து கொண்டிருந்தாலும் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி அறிமுகம் என கட்சிப்பணிகளையும் கவனித்து வருகிறார்.
அரசியல் மாநாடு
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனையடுத்து அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கவனித்து வருகிறார்.
மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய ஆனந்த், “முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக தொழிலை பார்க்க வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதமோ, இரண்டு சதவீதமோஎடுத்து மக்களுக்கு செலவு செய்ய எடுத்து வைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கடன் வாங்கி செலவு செய்யக் கூடாது என சொல்ல கூடிய தலைவர் நம்ம தளபதி என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
நம்ம நிர்வாகி, வேலை பார்க்கும் கடை முதலாளியிடம் அக்டோபர் 26, 27 தேதிகளில் விடுமுறை கேட்டுள்ளார். அது எவ்ளோ முக்கியமான நாள் அந்த நாளில் நீ விடுமுறை கேட்குற என முதலாளி கூற, அதற்கு நம்ம நிர்வாகி நான் உங்கிட்ட 18 வருஷமா வேலை செய்து வருகிறேன், அந்த இரண்டு நாள் மட்டும் விடுமுற கொடுத்துடுங்க என கூறி உள்ளார்.
புஸ்ஸி ஆனந்த்
அதற்கு அந்த முதலாளி, நீ விடுமுறை எடுத்தால் போனஸ் தர மாட்டேன், வேலைய விட்டு நீக்கிவிடுவேன் என கூறியுள்ளார். பதிலுக்கு நீ வேலைய விட்டு தூக்குனா என்ன, போனஸ் கொடுத்த என்ன, என் தலைவன் தளபதிய நான் பார்க்கனும், உன் வேலையும் வேணாம் எதுவும் வேணாம், இப்படி உண்மையாக ஒரு தொண்டன் சொல்வான் என்றால் அது தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டன் மட்டும்தான் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
ஆகவே தளபதியே உங்களை வீடு வீடாக வந்து நேரில் அழைத்ததாக கருதி உங்கள் குடுமபத்துடன் மாநாட்டிற்கு வர வேண்டும். எனக்கு பேச வாய்ப்பளித்த நல் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் என பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடும்பத்தை பார் என பேசி விட்டு, ஒரு நாள் மாநாட்டிற்கு வருவதற்காக தொண்டர்கள் வேலையை இழப்பதை ஊக்குவிப்பது போல் கட்சியின் பொதுச் செயலாளரே பேசலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.