விஸ்கியுடன் லெமன் குடித்தால் கொரோனாவை தடுக்கலாம்.. துறவியின் அதிர்ச்சித் தகவல்!
விஸ்கியுடன் எலுமிச்சை பழ ரசத்தை சேர்த்துக் குடித்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறும் புத்த மதத் துறவியின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்த மதத் துறவி
தாய்லாந்து, மார்க்கெட்டில் வாகனம் ஒன்று அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்ததால் ஆபத்தில் சிக்கக்கூடும் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டனர்.
போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அதன் கதவில் புத்த கோவிலின் பெயர் இருந்ததைக் கண்டார்கள். காருக்குள் அமர்ந்திருந்த அவர் ஃபிரா தனகோர்ன் என்ற 63 வயதான துறவி. குடிபோதையில் இருந்தார்.
வாகன விபத்து
எனவே போலீசார் அவரை காரை விட்டு இறங்கச் சொன்னார்கள், ஆனால் அவர் மிகவும் குடிபோதையில் இருந்தார் என்பது காரை விட்டு இறங்கியதும் தெரியவந்தது.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேச ஆரம்பித்தார்.
அவரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை. தனது கோவிலில் மூன்று மாதங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறினார். தானும் வேறு இரு துறவிகளும் காலையில் கோவிலில் இருந்து சந்தைக்குச் செல்வதற்காக பிக்கப் ட்ரக் ஒன்றில் புறப்பட்டதாகவும், ஆனால் அந்த வாகனம் விபத்தில் சிக்கியது என்றும் அவர் தெரிவித்தார்.
விஸ்கி - கோவிட்-19
வாகனத்தின் ஓட்டுநர் காயமடைந்ததால், தாமே பிக்கப் வண்டியை ஓட்டிச் சென்றதாகவும் புத்த மதத் துறவி கூறினார். மேலும், காரில் ஏறுவதற்கு முன்பு, கொரோனாவைத் தடுக்க உதவும் என்று அவர் நம்பியதால், எலுமிச்சை ரசம் கலந்த இரண்டு பெக் விஸ்கி அருந்தியதாக தகவல் ஒன்றைத் தெரிவித்தார்.
எனவே அவர் குடிபோதையில் இருந்ததை ஒப்புக்கொண்டார் என்று பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
பிறகு, புத்த மத துறவியை சோதனைக்காக முவாங் லோஸ் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு செய்யப்பட்ட சோதனையில் அவர் அதிக அளவில் மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டது.