ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம்
ஆன்லைன் சேலஞ்சுக்காக பட்டம்பூச்சிகளை அரைத்து சிறுவன் ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளான்.
ஆன்லைன் சேலஞ்ச்
ஆன்லைன் சேலஞ்ச் என்ற பெயரில் விபரீத செயல்களை செய்து பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது பிரேசிலை சேர்ந்த 14 வயது சிறுவனின் உயிர் ஆன்லைன் சேலஞ்சால் பறிபோகியுள்ளது.
பிரேசிலின் விட்டோரியா டா கான்கிஸ்டா பகுதியை சேர்ந்தவர் 14 வயதான சிறுவன் டேவி நூன்ஸ் மொரேரா(Davi Nunes Moreira), அடிக்கடி வித்தியாசமான ஆன்லைன் சேலஞ்ச்களை செய்து வந்திருக்கிறார்.
பட்டாம்பூச்சி ஊசி
கடந்த ஒரு வாரமாக கடும் காய்ச்சல் மற்றும் கால் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் இது குறித்து வீட்டில் எதுவும் தெரிவிக்கவில்லை. காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில், அவரது பெற்றோர் கண்டுபிடித்து உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கியுள்ளது. இது குறித்து அவரது பெற்றோர் விசாரித்ததில், ஆன்லைன் சேலஞ்சுக்காக பட்டாம்பூச்சிகளை கொன்று, அதை நீரில் கரைத்து அந்த நீரை ஊசி மூலம் காலில் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு
இதனையடுத்து உடனடியாக சிறுவனை தலைமை மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பிரேசில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறுவன் பயன்படுத்திய ஊசி அவரது தலையணைக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் உண்மையான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது. இதை செய்ய சொன்னது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
"பட்டாம்பூச்சி விஷத்தன்மை உடையதாக இல்லாமல் இருந்தால் கூட அதன் சிக்கலான உயிரியல் அமைப்பை மனித உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். பட்டாம்பூச்சியை அரைத்து உடலுக்குள் செலுத்திக்கொள்வது அலர்ஜி பாதிப்பை தீவிரமாக்குவதோடு, உயிரைக்கூட கொல்ல வாய்ப்பு இருக்கிறது" என பட்டாம்பூச்சி நிபுணரும் சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தின் இயக்குநருமான மார்செலோ டுவர்டே(Marcelo Duarte) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்