மூளையை தின்னும் அமீபா...அச்சத்தில் மக்கள் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
மூளையை உண்ணும் அமீபா மூலம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
மூளை தின்னும் அமீபா
கேரளா, கோழிக்கோடுபகுதியை சேர்ந்த 14 வயதான மிருதுல் என்ற சிறுவன் மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதன் அடிப்படையில், மூளையை உண்ணும் அமீபா மூன்றாவது மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இரண்டு பேர் இந்த அமீபா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது அசுத்தமான நன்னீர் மூலம் பரவுகிறது.இது மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். உடலுக்கு நுழைந்தவுடன் இது முதலில் குறிவைப்பது மூளை. உடலில் உள்ள திசுக்களை உணவாக சாப்பிட்டே வளர்கிறது.
இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். நோய் பாதிப்பு அதிகரிக்கும் போது குழப்பம், வலிப்பு, கோமா மற்றும் போன்ற பாதிப்புகளும் உண்டாகும்.நோய் பாதிப்பு ஏற்பட்ட 1 முதல் 12 நாட்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட தொடங்கும்.
தீவிரம் அதிகரிக்கும் நிலையில், 5-18 நாட்களில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. இதனால் தமிழக எல்லை பகுதிகளில் வாழும் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
முக்கிய அறிவிப்பு
இந்நிலையில், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், "தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.
அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும்,
அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும். மேலும், சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளது.