சாய் பல்லவி நடிக்க எதிர்ப்பு - இந்திய ராணுவம் குறித்து பேசிய பழைய வீடியோவால் வந்த சிக்கல்
சாய் பல்லவி பேசிய பழைய பேச்சால் தற்போது அவர் நடித்துள்ள அமரன் படத்தை புறக்கணிக்க வேண்டுமென குரல் எழுந்துள்ளது.
சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சாய் பல்லவி.
சாய் பல்லவி நாயகியாக நடித்த அமரன் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
வைரல் வீடியோ
இந்நிலையில் சாய்பல்லவி நடித்துள்ள அமரன் படத்தை புறக்கணிக்குமாறு சமூகவலைத்தளங்களில் குரல் எழுந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு சாய் பல்லவி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோதான் சாய் பல்லவிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான "விராத பர்வம்" என்ற படத்தில் சாய் பல்லவி நக்சல் அமைப்பைச் சேர்ந்தவராக நடித்திருந்தார்.
இந்த படம் தொடர்பான நேர்காணலில், "நக்சலாக சீருடை மற்றும் துப்பாக்கிக் கொண்டு நடித்துள்ளீர்கள், அவர்கள் மீதி அனுதாபம் உள்ளதா" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இது சித்தாந்தம் பற்றியது. ஒருவர் ஒரு சித்தாந்தத்தை வைத்திருந்தாலும், வன்முறை தீர்வல்ல.
ராணுவம் குறித்த பேச்சு
வன்முறை மூலம் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியுமென நான் நம்பவில்லை. அதே நேரத்தில் நம் பிரச்சனையை அவர்களிடம் எப்படி வெளிப்படுத்துவது? சட்ட வழிமுறைகள் இருக்கும் போது எது சரி? எது தவறு? என்பதைத் தீர்மானிக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.
இந்திய ராணுவம் & பாகிஸ்தான் ராணுவம் - இரண்டும் ஒன்று தான் - சாய் பல்லவி ?
— Muthukumar Subbaiah (@smkumarlakshmi) October 25, 2024
இவள் வரவிருக்கும் பாலிவுட் படத்தில் மாதா சீதாவாக நடிக்கிறாள்.
இவள் ஒருமுறை காஷ்மீரி இந்துக்களின் இனப்படுகொலையை, பசு கடத்தல்காரர்களின் படுகொலையுடன் ஒப்பிட்டாள்.
இந்திய ராணுவத்தை பற்றி நாட்டுல யார் யார்… pic.twitter.com/dzIw07TLi1
மேலும், "பாகிஸ்தான் மக்கள் நமது இராணுவத்தினரைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கிறார்கள். இங்கு நம்மைப் பொறுத்த அளவில் அவர்களின் இராணுவம் பயங்கரவாதிகள். இப்படி கண்ணோட்டம் மாறுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. எனக்கு வன்முறையைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என பேசுகிறார்.
ஜெய் ஸ்ரீராம்
அதை தொடர்ந்து, "சில தினங்களுக்கு முன்கூட காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வந்தது இல்லையா.. அதில், கடந்த காலங்களில் காஷ்மீர் பண்டிட்கள் என்ன இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதையெல்லாம் காட்டினார்கள். மதம் சார்ந்த பிரச்னைகள் என எடுத்துக்கொண்டால், கொரோனா காலக்கட்டத்தில் கூட, வாகனத்தில் பசுக்களை ஏற்றிச் சென்றனர்.
வாகனத்தை இயக்கியவர் இஸ்லாமியராக இருந்தார். அவரை அடித்து ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொன்னார்கள். அப்போது நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. நாம் மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் மனிதர்களாக இருந்தால் பிறரைத் துன்புறுத்த மாட்டோம்" என பேசியுள்ளார்.
தற்போது இந்த பழைய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி ராணுவத்திற்கு எதிராக சாய் பல்லவி படத்தை புறக்கணிக்க வேண்டுமென்றும், தற்போது ராமாயண படத்தில் சீதா பாத்திரத்தில் நடித்து வரும் அவரை நீக்க கோரி #BoycottSaiPallavi என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் சாய் பல்லவி மதவாத எண்ணம் குறித்துதான் பேசியிருப்பதாகவும், இந்திய ராணுவத்தை அவர் தவறாக எதுவுமே பேசவில்லை என பலரும் அவருக்கு ஆதரவாக எழுப்பி வருகிறார்கள்.