திறந்து இருந்த பாதாளச் சாக்கடை; தவறி விழுந்த 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!
பாதாளச் சாக்கடை குழியில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
8 வயது சிறுவன்
உத்தரப்பிரதேசக மாநிலம், லக்னோவில் உள்ள பண்டேரா பகுதியை சேர்ந்தவர் ஷாருக்(8). இந்த சிறுவன் தனது சகோதரியுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த சாலையில் திறந்த வெளி பாதாளச்சாக்கடை இருந்துள்ளது. அதனை கவனிக்காத ஷாருக் தெரியாமல் அதற்குள் தவறி விழுந்தார்.
இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி, தனது தம்பியைக் காப்பாற்ற முயன்றார். அவர் ஓடி சென்று அக்கம் பக்கத்தினரிடம், தனது சகோதரன் பாதாளச்சாக்கடைக்குள் விழுந்து விட்டதைக் கூறினார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள், போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நேர்ந்த விபரீதம்
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஷாருக்கை மீட்க கடுமையாக போராடினர். பல மணி நேரமாக போராடி மயங்கிய நிலையில் இருந்த ஷாருக்கை மீட்டனர்.அவரை உடனடியாக ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் ஆணையர் பேசுகையில், எட்டு வயது சிறுவன் ஏகேடியு அருகே உள்ள மேன்ஹோலில் விழுந்ததாக தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் குழுவுடன் சென்றார். போலீஸார் மட்டுமின்றி எஸ்டிஆர்எஃப் குழுவினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஷாருக்கை மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால்,அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று கூறினார். அரசின் அலட்சியத்தால் அப்பாவி குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அரசுத்துறையின் பெரும் அலட்சியம் ஒரு குழந்தையின் உயிரைப் பறித்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.