அம்பானி இல்ல திருமணம் - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது!
அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியின்போது வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 'ஜியோ உலக மாநாட்டு மையத்தில்' தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் தம்பதிகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில், அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள், மற்றும் வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியின்போது, வெடிகுண்டு வெடிக்கும் என சமூக ஊடகம் வழியே நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நபர் கைது
இதுகுறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மிரட்டல் விடுத்த நபர் குஜராத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்த 'வைரல் ஷா' என்பவர் என தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "மும்பை போலீசின் குற்றப் பிரிவு அதிகாரிகள் ஷாவை இன்று காலை கைது செய்தனர்.
அந்த பதிவில், குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும், உலகத்தின் பாதி பகுதி நாளை தலைகீழாகப் போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த நபர் வதோதராவில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததை அடுத்து, அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.