வளர்ச்சி அடைந்த பாரதம்..இன்னும் 20 ஆண்டுகள் பாஜக ஆட்சி தான்..பிரதமர் மோடி உறுதி !
இன்னும் 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தொடரும் என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பாஜக ஆட்சி தான்
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார். அப்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை அவர் கண்டித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின் வருமாறு; ‘இந்தத் தேர்தலில் மக்களின் அறிவு, புத்திசாலித்தனம் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்கள் கருத்துருவாக்கங்களை தோற்கடித்து, செயல்திறனுக்கு முன்னுரிமை அளித்தனர்.
வஞ்சக அரசியலை நிராகரித்து நம்பிக்கை அரசியலில் வெற்றி முத்திரை பதித்தனர். 'வளர்ச்சியடைந்த பாரதம்', 'சுயசார்பு பாரதம்' என்பதை உணர்ந்தே நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
பிரதமர் மோடி உறுதி
காங்கிரஸில் உள்ள எனது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். யார் சொன்னது இது மூன்றில் ஒரு பங்கு அரசாங்கம் என்று. அவர்கள் சொல்வது சரிதான். நாங்கள் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளோம் (மூன்றில் ஒரு பங்கு). இன்னும் 20 ஆண்டு ஆட்சி தொடர உள்ளது. அது நிறைவேறும் என்று நம்புகிறேன்.
அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றுதல், வறுமை ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் வறுமையை எதிர்த்து இந்த நாடு வெற்றி பெறும், கடந்த 10 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் போது, அதன் தாக்கம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இருக்கும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி இந்தியா தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இன்று நாம் அதன் அடையாளமாக இருக்கிறோம். பெண்களின் சுகாதாரம், ஆரோக்கியம் ஆகிய துறைகளிலும் பாஜக அரசு பணியாற்றியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.