மக்களவை தொடர்ந்து மாநிலங்களவையில் குறைந்த பாஜகவின் பலம் - மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!!
மக்களவை தேர்தல் நடந்து முடிந்து 3-வது முறை பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், மாநிலங்களவையிலும் அக்கட்சியின் பலம் குறைந்துள்ளது.
குறைந்த பலம்..
மாநிலங்களவையில் 4 நியமன எம்.பி.க்களின் பதவி காலம் கடந்த சனிக்கிழமையுடன் முடிந்துள்ளது. இதன் காரணமாக பாஜகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநிலங்களவையில் 86'ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101'ஆக குறைந்துள்ளது.
மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற மொத்தம் 114 இடங்கள் வேண்டும். தற்போது அப்பலம் பாஜகவிடம் குறைந்துள்ளது. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. இதில், ஜம்மு காஷ்மீரின் 4 உறுப்பினர்களின் இடத்தையும் சேர்த்து தற்போது மொத்தமாக 19 இடம் காலியாகியுள்ளது.
மறுபுறம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 87'ஆக உள்ளது. இதில், காங்கிரஸ் 26, திரிணாமுல் காங்கிரஸ் 13, திமுக - ஆம் ஆத்மீ தலா 10 உறுப்பினர்களை கொண்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்த ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம், இனி தன்னிச்சையாக செயல்படுவதாக அறிவித்துள்ளது.
அக்கட்சியின் பலமும் பாஜகவின் காய் நழுவியுள்ளது. பிஜு ஜனதா தள ஆதரவில் தான், பாஜகவின் தற்போதைய ரயில்வே துறை அமைச்சர் அஸ்ஹவினி வைஷ்ணவ் மாநிலங்களவை உறுப்பினராகி, மத்திய அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.