தூத்துக்குடியில் பாஜக போடும் பிளான் - கனிமொழிக்கு எதிராக ராதிகா போட்டியா?
கனிமொழிக்கு எதிராக ராதிகா சரத்குமாரை நிறுத்த பாஜக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி தொகுதி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான தேதியும் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டதட்ட இறுதி செய்யப்பட்டுள்ளதால், வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் தற்போது எம்.பியாக இருக்கும் கனிமொழியே மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ராதிகா போட்டி?
கனிமொழி போட்டியிடுவதால் தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. எனவே, தூத்துக்குடியில் அவரை வீழ்த்த வலுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கனிமொழிக்கு எதிராக ராதிகா சரத்குமாரை நிறுத்த பாஜக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ராதிகா பிரபலமான நடிகை என்பதால் பெண் வாக்காளர்களை கவரும் விதமாக அவரை நிறுத்துவது சரியாக இருக்கும் என்று பாஜக எண்ணுகிறதாம். இது தொடர்பாக ராதிகாவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.