பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் - மாநில தலைவர் அண்ணாமலை மாற்றமா ?
பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் பிப்ரவரி மாதம் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜேபி நட்டா
பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டா, கடந்த 2020 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கட்சி விதிகளின் படி தேசியத் தலைவர் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
பாஜக தலைவர்
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில், பாஜகவிற்கான புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதில் கவனத்தை தொடங்கியுள்ளது.
கட்சி விதிப்படி தேசியத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக, கட்சி குறைந்தபட்சம் பாதி மாநில பிரிவுகளில் தேர்தல்களை முடிக்க வேண்டும். இந்த தேர்தல்கள் அடுத்த மாதம் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தலைவர் அமைச்சரவையில் இருந்தோ கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரோ தேர்வு செய்யப்படலாம். தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மகாராஷ்டிரா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வினோத் தாவ்டே, சுனில் பன்சால், சிவராஜ் சிங் சௌஹான், மனோகர் லால் கட்டார், வசுந்தரா ராஜே, சஞ்சய் ஜோஷி இவர்களில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், மாநில தலைவருக்கான தேர்தல் ஜனவரியில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை மாநிலம் முழுவதும் நடத்திய 'என் மண், என் மக்கள்' யாத்திரை, கட்சி வளர்ச்சிக்கு பயனளித்தோடு, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது . எனவே மீண்டும் அண்ணாமலையையே மாநில தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம் என மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.