'எனக்கு வேண்டாம்' - பதவியேற்ற முதல் நாளே பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் கோபி?
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சுரேஷ் கோபி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ் கோபி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதன்மூலம் அம்மாநிலத்தில் முதல் முறையாக பாஜக கால் பதித்துள்ளது.
இதனையடுத்து மோடி தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக பாஜக எம்.பி. சுரேஷ் கோபி நேற்று பதவியேற்றார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பதவியேற்பு விழா முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "எம்.பி-யாக பணியாற்றவே விரும்புகிறேன்.
விருப்பம் இல்லை
அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அமைச்சர் பதவி வேண்டாம் என முன்பே கூறினேன். ஆனால், பாஜக தலைமை கேட்டுக் கொண்டதால் மறுக்கவில்லை.
அமைச்சராவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் என்னை விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன். திருச்சூர் தொகுதி மக்கள் என்னை நன்கு அறிவர். எம்.பி-யாக நான் சிறப்பாக செயல்படுவேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். கட்சியே முடிவை எடுக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.