தனது கோட்டையான உத்தர பிரதேசத்தில் பின் தங்குகிறது பாஜக
உத்தர பிரதேசத்தில் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்தியா கூட்டணி இங்கு முன்னிலை வகிக்கிறது.
உத்தர பிரதேசம்
2024 நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (4 ஜூன் 2024) நடை பெற்று வருகிறது.
நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட முக்கிய மாநிலம் உத்தர பிரதேசம். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 80 தொகுதிகளை உள்ளடக்கியது உத்தரபிரதேசம். இங்கு மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இராஷ்டிரிய லோக் தளம், அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் சமாஜ்வாடி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
முக்கிய தலைவர்கள்
உத்தர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்ம்ரிதி ராணி, பாலிவுட் நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட பிரபலங்கள் உத்தர பிரதேசத்தில் போட்டியிடுகின்றனர்.
வாரணாசியில் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவு சந்தித்து விட்டு தற்பொழுது மீண்டும் முன்னிலையில் உள்ளார். ரேபரலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நடிகை ஹேமமாலினி ஆகியோர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி 31898 வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
சமாஜ்வாடி முன்னிலை
இன்று(04 ஜூன் 2024 ) காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்தியா கூட்டணியே இங்கு முன்னிலை வகித்து வருகிறது. 42 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிடும் ஆசாத் சமாஜ் கட்சி கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.