உத்திரப்பிரதேச அரசியல் : ஒரு சீடன் முதல்வர் ஆன கதை
கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளராகக் கூட அறிவிக்கப்படாத யோகி ஆதித்யநாத், பின்னர் அம்மாநிலத்தின் பாஜக முதல்வராக கட்சியால் அறிவிக்கப்பட்டார். காவி உடையுடன் இருந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பிறகுதான் அப்படி ஒரு தலைவர் இருக்கிறார் என்பது நாட்டு மக்களுக்கே தெரிய வந்தது.
ஆதித்யநாத் அரசியல்
1991-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்பு, 26 ஆண்டுகள் கழித்து 2017-ல் பாஜக உத்தரப் ரதேசத்தில் தனிப்பெறும்பான்மை பெற்றிருந்தது. அப்போது முதல்வராகும் போட்டியில் கட்சியின் மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, அப்போதைய மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா உட்பட பலர் இருந்தனர்.
ஆனால், கட்சியோ யோகி ஆதித்யநாத்தை தேர்வு செய்தது. உத்தராகண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் உள்ள ஒரு கிராமத்தில், 1972-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வனக்காவலருக்கு மகனாக நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார் யோகி ஆதித்யநாத்.
அப்போது அவர் அஜய். தொடக்கத்தில் உறவினர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி இடதுசாரிகளின் இந்திய மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அந்தக் கொள்கைகள் அவரின் மனதிற்கு ஒத்துவராததால், அதிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் அமைப்பான அகிலபாரத வித்யார்த்தி பரீக்ஷத்தில் சேர்ந்தார்.
ராம ஜென்ம பூமி
ராமஜென்மபூமி இயக்கத்தின்போது, கோரக்பூர் மடத்தின் இரண்டாவது மகான் அவைதிநாத்தை சந்தித்த அஜய், அவரை மிகவும் கவர்கிறார். அந்த நாட்களில் மத அமைப்புடன் தொடர்புடையவர்களால் "சோட்டா மஹந்த்" என அவர் அழைக்கப்பட்டார். அவைதியநாத்தின் சீடரான பிறகு ஆதித்யநாத் தனது குடும்பத்தை விட்டு வெளியேறினார். கரோனா பெருந்தொற்று முதல் அலையின்போது அவரிது தந்தையின் மறைவுக்குக்கூட ஆதித்யநாத் செல்லவில்லை.
மாநிலங்களவையின் வலைதளப் பக்கத்தில் கூட ஆதியத்நாத்தின் விவரங்களில் அப்பா பெயரில் ஆதித்யநாத்தின் முன்னோடி மற்றும் குரு மஹந்த் அவைதியநாத் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது
ஆன்மிக அரசியல்
90-களின் ஆரம்பக காலம் வரை ஆன்மிகவாதியாக இருந்த ஆதித்யநாத், 1994-ம் ஆண்டு மதம் சார்ந்த அதிகாரப் பரிமாற்றம் நடந்த பின்னர், 1998-ம் ஆண்டு தனது 26-வது வயதில் கோரக்பூரிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை 5 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். யோகி ஆதித்யநாத்தின் அரசியல் வருகை அவரது துடிப்பான இந்துத்துவ அணுகுமுறையாலேயே குறிக்கப்பட்டது.
2007-ம் ஆண்டு வகுப்புவாத கலவரங்கள், தொடர்ந்த நிகழ்வுகளில் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி அரசியலில், அவரின் பங்கு இந்த பிம்பத்தை வலுப்படுத்தியது. யோகியின் இந்து யுவவாஹினி அமைப்பு இந்துத்துவா மற்றும் தேசியவாதத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாக கூறிக்கொள்கிறது. பசுப் பாதுகாப்பு, லவ் ஜிகாத்திற்கு எதிராக போராடுவது கர் வாப்சி போன்றை இதன் செயல்திட்டங்கள்.
இந்த திட்டங்கள் பாஜகவின் வாக்குறுதிகளிலும் எதிரொலித்து 2017-ல் அக்கட்சிக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்தது. பாஜக உறுப்பினராக இருந்தாலும் ஆதித்யநாதின் ஆரம்பகால பாஜக பயணம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. அவரும் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருடனும் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளவும் இல்லை.
தனக்கென தனி கூட்டம்
கட்சியுடன் இணக்கமான உறவுவைப் பேணாத ஆதித்யநாத் ஆரம்பத்தில் கட்சியை விமர்சனமும் செய்திருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு லக்னோவில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்த சமயத்தில் தன்னுடை செல்வாக்கை நிரூபிப்பதற்காக கோரக்பூரில் இந்து மஹாசம்மேளன் ஒன்றை நடத்தினார். இவையெல்லாம் கோரக்பூர் பிராந்தியத்தில் அவருக்கென தனி செல்வாக்கையும், ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியிருந்தன.
2007-ம் ஆண்டு மதப் பூசலின்போது தடையாணையை மீறியதாக யோகி ஆதித்யநாத்தை காவல்துறையினர் கைது செய்தபோது, ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த காவல்நிலையத்திற்கு அவரை அழைத்து செல்ல 5 மணி நேரமாகியது.
அன்று நகரமே பெரும் நெரிசலுக்குள்ளானது. 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலின்போது பாஜகாவின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் கூட இடம் பெறாத யோகி ஆதித்யநாத், பின்னர் கட்சியின் முன்னோடிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உத்தரப் பிரதேசத்தின் 21-வது முதல்வரானார். கட்சியின் உத்தரப் பிரதேச முகமாகவும் மாறினார்
சட்ட ஒழுங்கு விவகாரம்
உத்தரப் பிரதேசத்தின் முதல்வரானதும் யோகி ஆதிக்யநாத், முன்னாள் முதலவர் அகிலேஷ் யாதவ் தவறவிட்ட பிரச்சினைகளில் கவனம் குவிக்கத் தொடங்கினார். மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் ஆதித்யநாத்தின் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றப் பின்னணியுள்ளவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள். மதம் மற்றும் சாதி அடிப்படையில் போலி என்கவுண்டர்கள் நடப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்தனர்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனது ஆட்சியில் மாஃபியாக்களும் அவர்களின் உடமைகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக ஆதித்யநாத் தெரிவித்து வந்தார். அவரின் அரசாங்கம் உத்தரப் பிரதேசம் முழுவதும் மின்சாரம் கிடைப்பதை பரவலாக்கியது. மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, அரசு வேலைகள் வழங்குவதில் சிக்கல் அல்லது தாமதம், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளை சாதி அடிப்படையில் அடிக்கடி இடமாற்றம் செய்தது என பல்வேறு விமர்சனங்கள் இந்த அரசின் மீது இருந்தது.
இருந்த போதிலும், இதோ 2022-ம் ஆண்டு உத்தரப் பிரதேச தேர்தலில் யோகி ஆதித்நாத்தின் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக அவரே முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இவரது ஆட்சியில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் எதிர்கட்சிதலைவர்களின் வீடுகள் புல்டோசர்களை வைத்து இடிப்பதாகவும் , மாட்டு இறைச்சி கடை வைத்துள்ளவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் பல விமர்சனகள் இவர் மீது வைக்கப்பட்டாலும் இன்று உத்திரபிரதேச அரசியலின் முக்கிய முகமாக யோகி உள்ளார்.
அது மட்டும் அல்ல அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசியல் மக்கள் கவனத்தை அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் ஈர்த்துள்ளது. பாஜக அரசியல் வியூகத்தில் பிரதமர் வேட்பாளராக யோகி முன்னிறுத்தபடுவாரா மோடியின் வெற்றிடத்தை நிரப்புவார யோகி அதற்கானா பதிலை இனி வரும் காலங்கள் தான் கூற வேண்டும் .
தகவல்கள் :விகடன் , பிபிசி தமிழ் , ஒன் இந்தியா தமிழ் , யோகி வரலாறு