மத்திய அரசே ஒரு தேசிய பேரிடர் தான் - கனிமொழி கடும் விமர்சனம்!
மத்திய அரசே ஒரு தேசிய பேரிடர் தான் என எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி
தூத்துக்குடியில் எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது ஏழு நாட்களுக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அது இல்லை என்று நமது முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதே நிலைதான் இன்று கேரளாவில் ஏழு நாட்கள் முன்பு நாங்கள் தகவல் தெரிவித்து இருந்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவையிலேயே தெரிவித்தனர். அடுத்த நாளே கேரள முதல்வர் பினராய் விஜயன் உண்மைக்கு புறமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
கடும் விமர்சனம்
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்வது கிடையாது. தகவல் தந்து விட்டோம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை தான் வழக்கமாக செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு மாநில அரசுக்கு மாநிலங்களுக்கு தேவையான நிதி தந்தாக வேண்டும்.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக எவ்வளவு நாள் இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு நாள் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். நியாயமாக மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிதி கொடுத்து தான் ஆக வேண்டும். மத்திய அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை, அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.