ஒழுங்கா இருந்துக்கோ; மிரட்டிய பாஜக பெண் நிர்வாகி - நயினார் நாகேந்திரன் தகவல்
பாஜக நிர்வாகிகள் வணக்கம் கூட சொல்வதில்லை என நயினார் நாகேந்திரன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
செங்கல்பட்டு, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழக பாஜக சார்பில், "பூத் வலிமைப்படுத்தும் பயணம்" மற்றும் "மாநில பயிலரங்கம்" நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துக்கொண்டார்.
அதில் பேசிய அவர், செல்போனில் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் நம்முடைய கட்சியில் இருக்கும் பாதி பேர் வணக்கம் கூட சொல்வது கிடையாது. போனை எடுத்த உடனேயே, சொல்லுங்கள் என கூறுகின்றார்கள். குறிப்பாக வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு கொண்டால் என்னை தெரியவில்லை என்றே சொல்கிறார்.
இப்படித்தான் கடலூரை சேர்ந்த ஒரு பெண் நிர்வாகியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் நயினார் நாகேந்திரன் பேசுகிறேன் என கூறினேன். ஆனால் அவங்க காதுக்கு நைனா பேசுவது போல கேட்டு இருக்கு. உடனே அவர்களுடைய நைனா என நினைத்து, 'என்னை ஒழுங்கா இருந்துக்கோ..' என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி
உடனே நான் போனை பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டேன். உண்மையில் நடந்த விஷயம் இது. இப்படித்தான் சில சூழல் இருக்கிறது. எதார்த்தம் இது தான். நான் தவறு என்று சொல்வதில்லை. கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டால், முதலில் வணக்கம் சொல்லிவிட்டு பேசுங்கள்.
வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். நம்முடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தல் அல்ல. 2029 நாடாளுமன்ற தேர்தல் தான். சட்டசபை தேர்தலில் பாஜக 40 அல்லது 50 இடங்களில் நிச்சயமாக வெற்றி பெறும். தமிழகத்தின் தினமும் பாலியல் குற்றங்கள் நடக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 24 லாக் அப் மரணங்கள் அரங்கேறியுள்ளது எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா, பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.