பாஜகவிடம் தமிழகத்தை அடகுவைத்த திமுக; உங்க டிராமவை ஏற்கமாட்டாங்க - விஜய் தாக்கு
பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.
பாஜக, திமுக நாடகம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் மண்ணுக்கும் தமிழகத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாக இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு,
தமிழையும் தமிழ்நாட்டையும் ஓரவஞ்சனையுடன் ஒதுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் வந்து, ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு சோழர்களின் பெருமை குறித்து நமக்குப் பாடம் எடுப்பது போலவும் பேசிச் சென்றுள்ளார்.
75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார் தட்டிக்கொள்ளும் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க. தமிழர் பெருமையான சோழப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால்
விஜய் விமர்சனம்
இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக் கையில் எடுத்திருக்காது. இதையெல்லாம் செய்யாமல், ஒன்றியப் பிரதமர் வருகை தமிழ்நாட்டுக்குப் பெருமை என்று வாஞ்சையாகச் சொல்லிச் சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து,
ஒன்றிய பா.ஜ.க. கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது தி.மு.க. அரசு. கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இப்போது இங்கு வந்து சோழர்களின் பெருமை பற்றிப் பேசி உள்ளது. முழுக்க முழுக்கக் கபட நாடகமன்றி வேறென்ன?
ஏற்கெனவே, அரசியலில் கபட நாடகம் போடுவதையே இயல்பாகக் கொண்ட தி.மு.க., இப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசின் கபட நாடகத்திற்குத் தாள் பணிந்து வணங்கி, தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தைக் காட்டி உள்ளது. மறைமுகமாகப் பா.ஜ.க.வும் தி.மு.க.வும் ஓரணியில் இருக்கும் கபடதாரிகளாக இணைந்து நடத்தும்
அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இவர்கள் இருவரின் மறைமுகமான கபட நாடக அரசியலுக்கான தக்க பதிலடியை 2026 தேர்தலில் தமிழக மக்கள் உறுதியாகத் தருவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.